மறக்க முடியுமா அந்த அ(வல)ரசியல் காட்சிகளை?...

கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்தாக வேண்டும், ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்பதற்காக விஜயகாந்தோடு கூட்டணிக்காக எவ்வளவோ இறங்கி வந்து பேசிப் பார்த்தார் கருணாநிதி.  

தே.மு.தி.க. துவக்கப்பட்டதில் இருந்து தன்னையும், தன் மகன் ஸ்டாலினையும், தன் கட்சியையும் தாக்கி தகர்ப்பதையே ஒரே இலக்காக விஜயகாந்த் வைத்திருந்தார் என்பதையும் தாண்டி கூட்டணிக்காக ஏங்கினார் கருணாநிதி. ஆனால் விஜயகாந்த் இதுதான் சந்தர்ப்பமென எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெத்து காட்டினார், கூடவே தே.மு.தி.க.வின் முக்கிய பேச்சாளர்கள் தி.மு.க.வின் இந்த நிலையை எள்ளி நகையாடினர். 

ஆனால் தி.மு.க. கூட்டணிக்குள் விஜயகாந்தின் வருகையை விரும்பவே விரும்பாத ஸ்டாலின் ஆத்திரப்பட்டதன் விளைவாக தே.மு.தி.க. பிளவுற்றது. சந்திரகுமார், பார்த்திபன் இருவரும் பிரிந்தது அக்கட்சியின் மெகா சரிவுக்கான முதல் அடியாக அமைந்தது. இந்நிலையில் காலங்கள் மாறின காட்சிகளும் கன்னாபின்னாவென மாறின. கருணாநிதியின் மறைவு, கேப்டனின் கடுமையான உடல் சுகவீனம் ஆகியவற்றுக்குப் பின் நிலை தலைகீழாகியிருக்கிறது.

சமீபத்தில் வெளிப்படையாக பேசியிருக்கும் பிரேமலதா “கலைஞரை அப்பா ஸ்தானத்தில்தான் நாங்க வெச்சிருந்தோம். அவர்தானே எங்கள் திருமணத்தை நடத்தி வெச்சார். கலைஞர் இறந்த சேதி கேட்டு அமெரிக்காவில் கேப்டன்  நொறுங்கிவிட்டார். வீடியோ மெசேஜில் அவர் அழுததை பார்த்திருப்பீங்க, அது கொஞ்சம் தான் . ஆனா அன்னைக்கு முழுக்கவே தேம்பித் தேம்பி அழுதுட்டே இருந்தார்.” என்று உருகியிருப்பவர், அடுத்து “கேப்டனை கலைஞர் அய்யா ‘விஜி’ன்னுதான் அன்பா அழைப்பார். ஒண்ணு தெரியுமா? 

நாங்க கட்சி ஆரம்பிச்ச பிறகும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையில் அன்பான உறவு இருந்துச்சு.” என்று ஒரு ஸ்டேட்மெண்டை தட்டியிருக்கிறார். தி.மு.க.வில் பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளது இந்த ஸ்டேட்மெண்ட். அரசியலை தாண்டி நல்ல குடும்ப உறவு இருந்திருந்தால், பல வருஷங்களாக அவ்வளவு கேவலமாக எங்களை விஜயகாந்தும், அவரது அடிப்பொடிகளும் திட்ட வேண்டிய அவசியம் என்ன? அப்பா ஸ்தானத்தில் வைக்கப்பட்டவர் அவ்வளவு இறங்கி வந்தும் கூட கூட்டணிக்கு மறுத்தது ஏன்?... என்கின்றனர். இந்நிலையில் அறிவாலய வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசும் தி.மு.க.வின் வி.ஐ.பி. நிர்வாகிகள் “பிரேமலதா பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். 

தே.மு.தி.க. ஆரம்பிக்கப்பட்ட பிறகு ரெண்டு குடும்பங்களுக்கு இடையில் எந்த நட்பும் இல்லை, உறவும் இருந்ததில்லை. பிரேமலதா இப்படியெல்லாம் பொய் சொல்ல ஒரே காரணம், நயா பைசாவுக்கு பிரயோசனமில்லாமல் போய்விட்ட தே.மு.தி.க.வை எப்படியாவது  எழுப்பி உட்கார வைக்கணும் அப்படிங்கிற அங்கலாய்ப்பின் வெளிப்பாடுதான். 

சாதாரண ஒரு கோபத்துக்காக தி.மு.க.வை அவ்வளவு மோசமாக, அத்தனை வருஷங்களாக திட்டி தீர்த்ததோடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் அப்படின்னு எங்கள் அரசியல் எதிரிகள் எல்லோரோடும் கூட்டணி வெச்சு குடைச்சல் கொடுத்தார் விஜயகாந்த். தலைவர் கலைஞரின் மனதை புண்படுத்தியதற்கான பலனை அறுவடை செய்கிறது தே.மு.தி.க. இதில் விஜயகாந்த் வேறு நடக்க கூட முடியாதவராகிவிட்டார் பாவம்! 

அதனால்தான் மகனை அரசியலுக்குள் இறக்கி, மனைவிக்கு பொருளாளர் கொடுத்து என என்னென்னவோ செய்து பார்க்கிறார், ஆனால் எந்த வைபரேஷனும் இல்லை. மக்கள் கண்டு கொள்ளவேயில்லை இதையெல்லாம்.விளைவு கடைசி முயற்சியாகவும்,  கட்சியின் உயிரை காக்கும் மருந்தாகவும் எங்களுடன் (தி.மு.க.) கூட்டணி வைக்க துடிக்கிறது விஜயகாந்தின் குடும்பம். அதனால்தான் பிரேமலதாவை வைத்து இப்படி பேச வைத்திருக்கிறார் விஜயகாந்த். 

ரெண்டு குடும்பங்களுக்குள்ளும் நல்ல உறவு இருந்திருந்தால் ஏன் தலைவர் கலைஞர் நோயுற்று இருக்கும்போது கோபாலபுரம் திசைக்கே வரவில்லை விஜயகாந்தும், பிரேமலதாவும். கேட்டால், ’ஸ்டாலின் டைம் தரவில்லை’ என்று தளபதியை குற்றம் சொன்னார்கள். அ.தி.மு.க., பா.ம.க. என்று எல்லா கட்சியின் தலைவர்களுக்கும் டைம் கொடுத்த ஸ்டாலின் விஜயகாந்துக்கு மட்டும் மறுப்பாரா? நிச்சயம் இல்லை.

இவர்கள் வீம்புக்கும், தயக்கப்பட்டும் வராமல் இருந்துவிட்டு தளபதியை குற்றம் சொன்னது பெரும் தவறு. சரி அவர்கள் ரூட்டிலேயே போவோம், தன் அப்பாவை  பார்க்கவே அனுமதிக்காத ஸ்டாலின், எதற்கும் உதவாமல் கிடக்கும் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு மட்டும் எப்படி ஏற்பார்? எனவே கேவலம் அரசியலுக்காக இனி இப்படியெல்லாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளணும் பிரேமலதா.” என்று வறுத்திருக்கிறார்கள். தான் வீசிய பந்து இப்படி தாறுமாறாக ரியாக்‌ஷனை கிளப்பியிருப்பதால் திணறியிருக்கிறாராம் விஜயகாந்த். 

ஆங்!