விஜயகாந்த் உடல்நலக்குறைவில் இருக்கும் நிலையில், விரைவில் குணமடைய கடந்த சில தினங்களுக்கு முன்பு  கூடங்குளம் அருகே உள்ள  விஜயாபதியில் மகாலிங்கசுவாமி உடனுறை, அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு வந்து சிறப்புப் பூஜைகளையும், யாகத்தையும் ரகசியமாக நடத்தியுள்ளார் பிரேமலதா.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கட்சிப் பணிகளை சரியாக கவனிக்க முடியாத சூழலில் உள்ளார். விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் தேறி தனது கட்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது அவரது கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில்,  தனது பிறந்தநாள் விழாவில் கூட விஜயகாந்த் தடுக்கி விழுந்தது அவரது உடல்நிலை இன்னும் சரியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியது. 

இந்நிலையில், விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டிய நெல்லை மாவட்டம் விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயத்திற்கு வந்த பிரேமலதா, நவக்கல்ய பூஜையுடன் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார். அதன் ஒருபகுதியாக விஸ்வாமித்திரர் கோவிலில் உள்ள குளத்தில் குளித்துச் சிறப்புப் பூஜைகளை மேற்கொண்டார். மேலும், விஸ்வாமித்திரர், சிவன், காளி கோயில்களில் சிறப்புப் பூஜைகளையும் நடத்தியுள்ளார்.

பிரேமலதா வருவதை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது, பிரேமலதா யாகம் நடத்த கோயிலுக்கு வருவது பற்றி கட்சியினருக்குக்கூட தகவல் சொல்லவில்லையாம். ஆனால், வழக்கமாகக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பிரேமலதாவை அடையாளம் கண்டு, தேமுதிகவினருக்கு தகவல் கிடைத்து அந்த கோவிலில் கூடியுள்ளனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மக்கள் நல கூட்டணியோடு கூட்டணி வைத்து, முதல்வர் வேட்பாளராக தேர்தலை எதிர்கொண்ட தேமுதிகவிற்கு தோல்வியே மிஞ்சியது.  அப்போதே பிரேமலதா தனது வீட்டில் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ரகசிய யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.