சட்டப்பேரவையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்பாக பதிலுக்கு பதில் பேசி நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசியது சட்டப்பேரவையில் சர்ச்சையானது. ஆனால், கட்சி மத்தியினரிடையே அது விஜயகாந்துக்கு பெருமையைத் தேடிதந்தது. அந்தப் புகைப்படத்தை இன்றும்கூட சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இதுபோல ஜெயலலிதாவை எதிர்த்த தலைவரை யாராவது பார்த்திருக்க முடியுமா என்று தேமுதிகவினர் கேள்வி எழுப்புவது வாடிக்கை. மற்ற நடிகர்களை போல அல்லாமல்  ஜெயலலிதா இருந்த காலத்திலேயே கட்சியைத் தொடங்கியவர்; ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்தவர் என்றெல்லாம் தேமுதிகவினர் புகழ் மாலை சூடுவது வழக்கம்.


 இந்நிலையில் விருதுநகரில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த பிரேமலதா, சட்டப்பேரவையில் நாக்கை துருத்தி பேசியது பற்றி பேசினார். “ஒரு உண்மையை நான் சொல்லப் போகிறேன். அன்றைக்கு சட்டப்பேரவையில் நடந்த மிகப்பெரிய பிரச்னைக்கு பின்னால் இருந்தது திமுகவின் சூழ்ச்சிதான். எதைச் சொன்னால், கேப்டனை உணர்ச்சிவசப்படுத்தலாம்; எப்படி நடந்துகொண்டால் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொண்டு, ஜெயலலிதாவை எரிச்சல்படுத்தும் வகையில் சில வார்த்தைகளைப் பேச வைத்தனர். அதிமுக-தேமுதிக கூட்டணியைப் பிளவுபடுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டப்பேரவையிலேயே சதி செய்து கூட்டணியை முறிக்கச் செய்தனர்” என்று விஜயகாந்த் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவைப் பார்த்து நாக்கைத் துருத்தியதன் பின்னணியைப் பேசினார்.

 
பிரேமலதாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை காங்கிரஸ் வேட்பாளருமான திருநாவுக்கரசர் பதிலடி தந்திருக்கிறார். “சட்டப்பேரவையில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே நடந்த மோதலுக்கு திமுகதான் காரணம் என்று பிரேமலதா தற்போது கூறிவருவது விஜயகாந்தை இழிவுபடுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. அவர் கூறுவதை பார்த்தால் கடந்த ஆண்டு வீசிய புயலுக்கும் திமுகதான் காரணம் என்று சொல்வார் போல. இதுபோன்ற விமர்சனங்களை பிரேமலதா வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.


ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தேமுதிகவினர் இந்தப் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் போட்டுதான் அவர்களை கலாய்த்தார்கள். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தவர் என்றெல்லாம் தேமுதிகவினர் அந்தத் தருணத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசிவந்திருக்கிறார்கள். நாக்கு துருத்தும் விஜயகாந்தின் புகைப்படத்தையும் வீடியோவையும் பல தருணங்களில் பகிர்ந்த தேமுதிகவினர், பிரேமலதாவின் பேச்சை பற்றி இன்று என்ன நினைப்பார்கள் என்றுதான் தெரியவில்லை?!