தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தினர். இதன்பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் பிரேமலதா வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தா. அப்போது அவர் கூறுகையில், “கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுடைய பலத்தை வெளிப்படுத்துவதில் எல்லா கட்சிகளுக்கும் சிரமமாகவே இருக்கும். இரு பெரும் தலைவர்கள் இருந்தபோதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த்.

 
எனவே அந்தத் தலைவர்களுடைய வெற்றிடத்தை விஜயகாந்தால்  மட்டுமே நிரப்ப முடியும். அதற்கு உண்டான தகுதியும் விஜயகாந்துக்கு மட்டுமே இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு, அது குறித்த முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். அதிமுக - பாஜக கூட்டணியில் உட்கட்சி பூசல் உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளில் குறையும் நிறையும் உள்ளது.” என்று பிரேமலதா தெரிவித்தார்.


தேர்தலில் ரஜினியுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்று பிரேமலதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா, “ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு அவரிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேசலாம்.” என்று பதில் அளித்தார்.