கட்சி தொண்டர்களிடம் விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கூறி கண்ணீர் வடித்திருக்கிறார் பிரேமலதா.

சென்னை: கட்சி தொண்டர்களிடம் விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கூறி கண்ணீர் வடித்திருக்கிறார் பிரேமலதா.

தேமுதிக என்ற கட்சி உதயமாகும் என்று தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடக்கத்தில் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அக்கட்சி வாங்கிய வாக்கு சதவீதம், எம்எல்ஏவாக விஜயகாந்த் சட்டசபையில் நுழைந்தது என மெதுவாக அனைவரின் பார்வையும் அக்கட்சியின் மீது விழுந்தன.

கூட்டணிக்காக திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அப்ரோச் செய்த கதைகளும் இன்னமும் இணைய உலகில் ஹாட் டாபிக். ஒரு பக்கத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இவை எல்லாம் கேப்டன் என்று தொண்டர்களினால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் ஒற்றை மனிதருக்காக நடந்தது எனலாம். ஆனால் பின்னர் கட்சியின் வெற்றி முகம் அப்படியே உல்டாவாக பலரும் மாற்று கட்சிகளில் ஐக்கியமாகினர். போதாத குறைக்கு விஜயகாந்த் உடல்நிலை பற்றிய கவலைகளும் வாட்டி வதைக்க தொண்டர்கள் கவலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 6ம் தேதி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தொடக்கத்தில் பல செய்திகள் கசிந்தாலும் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்தின் உடல்நலம் பற்றி பேசிய விஷயங்கள் தான் தொண்டர்களை துடிக்க வைத்திருக்கிறது.

கட்சியின் எதிர்கால நலன் பற்றி பேசப்பட்டாலும் கேப்டனின் உடல்நிலை பற்றிய முக்கிய தகவல்களை பிரேமலதா கூட்டத்தின் அனைவரின் முன்னிலையிலும் கூறி கண்ணீர் வடித்தார் என்கின்றனர் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள். கூட்டத்தில் விஜயகாந்த் முகத்தை பார்க்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு அவர் வராததது பெரும் அதிர்ச்சி.

அடுத்த அதிர்ச்சியாக விஜயகாந்தின் உடல்நலம் பற்றி பிரேமலதா பேசிய விஷயங்கள் இன்னமும் கட்சியின் அடிமட்ட நிர்வாகி வரை பேசப்படுகிறது. கூட்டத்தில் பிரேமலதா பேசிய சில விஷயங்களில் விஜயகாந்த் உடல்நிலை பற்றிய விவரங்கள் மிக முக்கியமானவை என்கின்றனர் கட்சியினர்.

விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய டாபிக் தான் கூட்டம் கூட்டப்பட்டதற்கான மெயின் அஜெண்டா என்பது அவர் வரவில்லை என்பதை அறிந்ததுமே தெரிந்து கொண்டோம் என்று தேமுதிகவினர் கூறி இருக்கின்றனர்.

கூட்டத்தில் கண்ணீர் வடிக்க கலங்கிய படி பேசிய பிரேமலதாவை கண்டு அதிர்ந்து போயிக்கின்றனர் கட்சியினர். விஜயகாந்துக்கு கிட்னி மாற்றப்பட்டு உள்ளது. இருதய ஆபரேஷன், மூளைக்கு போன நரம்பு செயலிழப்பு என பல விஷயங்களை ஓப்பனாக பேசியிருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

என்றாவது ஒருநாள் அனைத்தும் சரியாகி குணம் அடைந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்பது போல் பிரேமலதாவின் பேச்சு அமைந்திருந்ததாக தேமுதிகவினர் கூறி உள்ளனர்.

கட்சியில் இனி விஜயகாந்த் ஆக்டிவ் என்பது சாத்தியம் இல்லை என்பதை கண்ணீர் வழிய, வழிய மாவட்ட செயலாளர்களிடம் எடுத்து உரைத்துவிட்டாராம் பிரேமலதா. அவரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த நிர்வாகிகள் மட்டுமல்ல, கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை ரீச் ஆகி இருக்கிறதாம்…

இது தவிர கூட்டத்தில், விஜயகாந்தால் இனி பழைய பார்முக்கு திரும்ப முடியாது என்பதை பிரேமலதா உணர்த்தியதாகவும், அதை கேட்ட மாவட்ட செயலாளர்கள் பலரும் அண்ணியை கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறுகின்றனர்.

கட்சியின் நிரந்தர தலைவராக பிரேமலதா இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கருத்து தெரிவித்து உள்ளனராம். ஆகையால் கட்சியை காப்பாற்ற விஜயகாந்த் இடத்தில் பிரேமலதா என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்படியே கட்சியின் தலைமை மாறினாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை யாரையும் கைவிடக்கூடாது என்ற மனோபாவம் கொண்டவர் விஜயகாந்த். அதே போன்றதொரு எதிர்பார்ப்பை பிரேமலதாவிடம் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் கட்சியின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர்கள்.

ஆக மொத்தத்தில் விரைவில் தேமுதிக தலைமையில் பெரிய மாற்றம் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை என்று தேமுதிக முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்…!!