பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடலாம் என்று நினைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரால் தொகுதி கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மனு தக்கால் செய்திருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர் சிவபதி கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொகுதியில் நான்தான் வேட்பாளர் எனச் சொல்லி தொகுதியை வலம் வந்துகொண்டிருந்தார். பூத் கமிட்டிகள் அமைப்பதிலும் ஆர்வம் காட்டிவந்தார். இவரைப்போலவே முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, பரஞ்ஜோதி, பாலசுப்பிரமணியன், பூனாட்சி, கு.ப.கிருஷ்ணன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பெரம்பலூரில் போட்டியிட மனு தாக்கல் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். 

ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க. மூலமாக நுழைந்துள்ள இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், இந்தத் தொகுதிக்கு குறி வைத்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரிவேந்தர் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த பாரிவேந்தர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் ஒன்றைக் கேட்டிருந்தாலும், பெரம்பலூர் தொகுதிதான் அவரது சாய்ஸாக உள்ளது.

 

உதிரிக் கட்சிகளை இரட்டை இலையில் போட்டியிட அதிமுகவும் திட்டமிட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஒத்துக்கொண்டு, பக்கத்து தொகுதிகளுக்கு தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொண்டால், பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதி கிடைத்துவிடும் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இதனால், பெரம்பலூர் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்துவிட்டு காத்திருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தொகுதி கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் புலம்பிவருகிறார்களாம்.