தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று அன்று வாரிசு அரசியலுக்காக கருணாநிதி சொன்னதை பிரசாந்த் கிஷோர் தற்போது கையில் எடுத்துள்ளாரோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. நேரடியாகவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசி, வாரிசு அரசியல் வருகையான உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கைக்கு சீனியர்கள் தலைவர்கள் அதிருப்தி காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு செக் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் இல்லை" என்று ஒருகாலத்தில் சொன்னவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசியல் கட்சிகளில் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சித்து கருணாநிதி அப்போது இதனை தெரிவித்து இருந்தார். ஆனால், அவரது நிலைப்பாடு பதவி வந்தவுடன் மாறி விட்டது. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என வாரிசுகள் களமிறங்கி விட்டனர். 

தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் இல்லை", என்ற அதே கருணாநிதிதான், "எனக்கு பின் வழிநடத்தப் போகிற தம்பி ஸ்டாலின் அவர்களே" என்று தொண்டர்கள் முன்னிலையில் வார்த்தைகளை உதிர்த்து ஆரவாரத்தையும், ஸ்டாலினுக்கு ஆதரவு அலைகளை ஏற்படுத்தினார். அதன்படி கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் அவ்வளவாக விமர்சிக்கப்படாத நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வுக்கு வந்தபிறகு அதிகமாகவே வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

தி.மு.க.வின் வாரிசு அரசியலை மையப்படுத்தி பாஜக விமர்சித்து வருகிறது. இதனையடுத்து தி.மு.க.வே தற்போது இந்த விவகாரத்துக்கு கடிவாளம் போட்டு வருவதே தற்போதைய செய்தி. அதாவது உதயநிதியின் அதிரடிகளுக்கு பிரசாந்த் கிஷோர் டீம் செக் வைத்து வருவதாக சொல்லப்படுகிறது. காரணம், உதயநிதியின் பொறுப்பு, பதவி, தரப்படும் முக்கியத்துவம் எல்லாமே கட்சியின் சீனியர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், யாரையுமே கலந்தாலோசிக்காமல் உதயநிதி, மீடியாக்களுக்கு பேட்டிகளை தந்துவிடுவதாவும் சொல்லப்படுகிறது. உதயநிதியின் முக்கியத்துவத்தால் தான், கு.க.செல்வம் போன்ற நிர்வாகிகள் கட்சி மாறுவதற்கு காரணம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

இதனால் கட்சியின் நிர்வாகிகள் தலைமையிடம் ஒரு விஷயத்தை சொல்வதை விட, நேரடியாக பிரசாந்த் கிஷோரிடமே ஓபனாக பேசிவிடுகிறார்கள். இதுபோன்ற சூழலில், இன்னொரு தகவலும் பிரசாந்த் கிஷோர் டீம் காதுக்கு சென்றுள்ளது. உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்காக அவருக்காக அச்சடித்து ஒட்டப்படும் போஸ்டர்களில்கூட தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. எப்படியாவது தலைமையிடம் நல்ல பெயரை வாங்கிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், சோஷியல் மீடியாவில் இது பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது.  

தி.மு.க. கட்சியின் இமேஜ் இதன்மூலம் குறைய வாய்ப்புள்ளது என்ற முறையில் பிரசாந்த் கிஷோர் இந்த விஷயத்தை ஸ்டாலினிடம் எடுத்துக் கூற அதனை பொறுமையாக மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். அதனால் தான் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகளில்கூட உதயநிதியின் படங்கள் பேனர்களில் இடம்பெறவில்லை எனக் கூறுகிறார்கள்.