கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற கருப்பொருளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடங்களில் தொடங்கியுள்ள பிரசாரமும், அதில் தங்களை இணைத்துக்கொள்ள விடுப்பும் அழைப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ‘ஒன்றினைவோம் வா’ என்ற உத்தி முழுக்கமுழுக்க பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தின் ஏற்பாடு என்பதும் தெரியவந்துள்ளது. ’ஒன்றிணைவோம் வா’ கான்செப்டை அறிமுகப்படுத்திய கையோடு, பிரசாந்த் கிஷோரின் அணியில் உள்ளவர்கள் அரசியல் செய்திகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள் பலரையும் செல்போனில் அழைத்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.
திமுகவுக்காகத் தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம், கொரோனா காலத்துக்கு மத்தியில் தேர்தல் பணியில் குதித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குக் குறைவாகவே காலம் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, 2021-ம் ஆண்டு தேர்தலை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியை அப்படியே 2021-லும் பெறும் முனைப்பிலும் அக்கட்சி உள்ளது.

ஆனால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் பெற்ற வெற்றி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கிடைத்த மோசமான தோல்வி போன்ற காரணங்கள் திமுகவுக்கு சற்று கலக்கத்தையும் கொடுத்தது. இந்தச் சூழலில்தான் 2014-ல் மோடி, பிகார், டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சிகளை ஆளுங்கட்சியாக அமரவைத்த பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்க்க திமுக முடிவு செய்தது. ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்ததை கடந்த பிப்ரவரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்தார். இதனையடுத்து தேர்தல் ஆண்டான இந்த கடைசி ஆண்டில் திமுகவினரின் பணி எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

