தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரபல தேர்தல் கள வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுகியதா என்பது குறித்து தெளிவாகத் தெரியாத நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்காகப் பணியாற்றி கிஷேர் முடிவு செய்திருக்கிறார். 


கடந்த 2014-ம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்கு பாஜகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துகொடுத்தவர் பிரசாந்த் கிஷேர். அத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், கிஷோருக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அவரை ‘தேர்தல் மன்னன்’ என்றும் அழைக்கும் அளவுக்கு கிஷோருக்கு புகழ் கிடைத்தது. இதனையடுத்து 2015-ல் பிஹார் தேர்தலிலும் நிதிஷ்குமார் - லல்லு கூட்டணிக்கு வகுத்துகொடுத்த வியூகங்கள் அக்கூட்டணிக்கு வெற்றியைக் கொடுத்தது. நடந்து முடிந்த தேர்தலில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக கிஷோர் பணியாற்றினார். அங்கும் அவருக்கு கிடைத்ததால் பல்வேறு கட்சிகளும் அவருக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டன. 
அந்த வரிசையில் 2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிஷோரை தங்களுக்கு பணியாற்றி வைக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு அணுகியதாக தகவல் வெளியானது.  அதேபோல, நடிகர் கமல் நடத்திவரும் மக்கள் நீதி மையம் கட்சிக்காகவும் அவர் பணியாற்றப்போவதாக  செய்திகள் வெளியாகின. ஆனால், பிரசாந்த் கிஷோர் அதிமுக, மக்கள் நீதி மய்யத்துக்கு பணியாற்றுவதை மறுத்துவிட்டார். 
2021-ல் அவர் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேர்தல் பணியாற்றப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ஏற்கனவே மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தி ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டதாகவும் திரினாமூல் காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. தமிழ் நாடு, மேற்கு வங்காளம் என இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், மேற்கு வங்காளத்தில் மட்டுமே பிரசாந்த் கிஷோர் பணியாற்ற முடிவு செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.