தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த 3 நாட்களில் 2 முறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த 3 நாட்களில் 2 முறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் இரு ஆண்டுகள் உள்ள போதிலும் அனைத்து கட்சிகளும் அதற்கான திட்டத்தை வகுத்து வருகின்றன. அதன்படி, மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் கடந்த 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது கட்சியினை மறுசீரமைப்பு செய்வது, 2024 மற்றும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்த தனது திட்டங்களை எடுத்துரைத்ததாகவும் இது குறித்து ஆராய காங்கிரஸ் ஒரு குழுவினை அமைத்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக சோனியா காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதை அடுத்து பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி 370 இடங்களில் போட்டியிடும் திட்டத்தையும், சில மாநிலங்களில் அடிப்படை கொள்கைகளை உடைய கூட்டணிகளை உருவாக்குவதையும் உள்ளடக்கிய கிஷோரின் முன்மொழிவுக்குப் பதிலளிக்க காங்கிரஸுக்கு இம்மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கிஷோர் பரிந்துரைத்துள்ளார்.
