மத்திய பெங்களூரு தொகுதியில் தமிழர்களின் வாக்குகளைக் குறி வைத்தே நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தலில் களம் காண உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓரிறு நாட்களுக்கு முன்பு அறிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெங்களூருவில் உள்ள தமிழர்களின் வாக்குகளைக் குறி வைத்துத்தான் பிரகாஷ் ராஜ் களம் காண இருக்கிறார்.

பெங்களூருவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசித்துவருகிறார்கள். குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதியில்தான் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவருகிறார்கள். கன்னடத்தைப் போலவே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பிரகாஷ் ராஜூக்கு தமிழர், கன்னடர் என இரு தரப்பிலுமே ரசிகர்கள் உண்டு. 

இவர்களின் வாக்குகளை ஒரு சேர பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மத்திய பெங்களூரு தொகுதியை பிரகாஷ் ராஜ் தேர்வு செய்திருக்கிறார்.

பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து அதிரடியான கருத்துகளைக் கூறி வரும் பிரகாஷ் ராஜூக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் களத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதேபோல திரைத் துறையில் தனது நெருங்கிய நண்பர்களையும் பிரசாரம் செய்ய வைக்கும் முயற்சியில் பிரகாஷ் ராஜ் ஈடுபடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.