ஒரே நேரத்தில் மேற்கு வங்கத்தில்- பாஜக, பீகாரில் -நிதீஷ்குமார், தமிழகத்தில்- அதிமுக, கமல், ரஜினி என பலரும் பிரதீப் பண்டாரிக்கு வலைவிரித்து வருவதால் யாருக்கு சிக்கும் இந்த தேர்தல் திமிங்கலம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் மேற்கு வங்கத்தில்- பாஜக, பீகாரில் -நிதீஷ்குமார், தமிழகத்தில்- அதிமுக, கமல், ரஜினி என பலரும் பிரதீப் பண்டாரிக்கு வலைவிரித்து வருவதால் யாருக்கு சிக்கும் இந்த தேர்தல் திமிங்கலம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேவேளை, அதிமுகவுக்காக தேர்தல் பணியாற்ற தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகளும், தகவல்களும் வெறும் ஊகத்தின் அடிப்படையிலானவை என தேர்தல் சர்வே நிபுணர் ப்ரதீப் பண்டாரி தெளிவுபடுத்தி உள்ளார்.

 அப்பா எடப்பாடி பழனிசாமிக்காக அரசியல் பாடங்களை கவனிக்க களமிறங்குகிறார் முதல்வர் மகன். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது போல், அதிமுகவுக்காக டெல்லியைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் பிரதீப் பண்டாரியுடன் கை கோர்த்துள்ளார் மிதுன். அவரது வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் எடப்பாடியாரின் நிர்வாகத் திறன், ஆட்சி, சாதனை, மக்களின் கருத்து பற்றி தீவிரமாக சர்வே எடுக்கும் பணிகள் தொடங்கி விட்டன. 

பிரதீப் பண்டாரி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக பணியாற்றியவர். டெல்லிக்கு போய் தந்தைக்காக சில மாதங்களுக்கு முன்பே சென்று பேச்சுவார்த்தையை முடித்து வந்து விட்டார் மிதுன். அதன்பிறகு சென்னை வந்த பிரதீப் பண்டாரி சில கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு திட்டங்களையும் வகுத்துக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அதன்படி சத்தமே இல்லாமல் காரியம் சாதித்து வருகிறது மிதுன் தரப்பு ’’ என்றெல்லாம் கொரோனா பதற்றத்தும் இடையே பிரதீப் பண்டாரி அதிமுக தேர்தல் பிரச்சார வியூகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த முன்னணி புலனாய்வு இதழ்களும், நாளிதழ்கள், ஊடகங்களும் படபடத்தன. 

ஆனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிமுக, பிரதீப் பண்டாரி தரப்பில் யாரும் வாய் திறக்கவே இல்லை. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தால் ’’பிரதீப் பண்டாரியுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிக்கைகள், ஊடகங்கள் சொல்வது போல ப்ரதீப் பண்டாரியுடனான பேச்சுவார்த்தை  இதுவரை  முடிவுக்கு வரவில்லை’’ என்கிறார்கள்.

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சியில் 400 தொகுதிகளில் சர்வே எடுத்து துள்ளியமாக வெளியிட்டார் ப்ரதீப். தேர்தல் முடிவுகளில் அது சரியாக பலித்தது. அதற்கு முன்பும் பல சர்வேக்களை எடுத்து பெயர் பெற்றவர். இந்தியாவில் துல்லியமாக சர்வே எடுப்பதில் கைதேர்ந்த நான்குபேரில் ஒருவரான ப்ரதீப் பண்டாரி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு எடுத்த சர்வே தேர்தல் முடிவிலும் பிரதிபலிக்கவே பிற அரசியல் கட்சிகளின் பார்வை அவர் மீது பதிந்தது. இந்த நிலையில், அவர் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சார வியூகராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர் பிடிகொடுக்காமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

உண்மையில் என்னதான் நடக்கிறது? என ப்ரதீப் பண்டாரியுடனே பேசினோம். ‘’அடுத்தடுத்து பீகார், மேற்கு வங்காளம், தமிழகத்தில் நடக்கவுள்ள 2021 சட்டமன்றத்தேர்தல்கள் மினி நாடாளுமன்றத்தேர்தலாகவே கருதப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பணியாற்ற பாஜகவும், பீகாரில் நிதீஷ்குமார்- ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரது கூட்டணியும், தமிழகத்தில் அதிமுகவும் அவர்களுக்காக தேர்தல் பணியாற்ற என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு புறம் கமல், ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிகளுக்காக இருவரும் தனித்தனியாக நாடி வருகிறார்கள். இப்போதைக்கு சர்வே எடுக்கும் பணிகளை மேற்கொள்ளவே முடிவெடுத்துள்ளேன். அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. 

அப்படி இருக்கையில் தமிழகத்தை சேர்ந்த பத்திரிக்கை, வார இதழ்கள் நான் அதிமுகவுக்காக தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம்போட்டு களமிறங்கி இருப்பதாக வெளியிடும் செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலானவை. அதில் உண்மையில்லை’’ என தெளிவாக தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினார் ப்ரதீப் பண்டாரி.