தமிழகத்தில் எடப்பாடி அணியும் டிடிவி அணியும் எலியும் பூனையுமாக சண்டைகளை வளர்த்து கொண்டிருக்கும் வேளையில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு  அவரால் வளர்க்கப்பட்ட அதிமுக எனும் எஃகு கோட்டை மெல்ல மெல்ல தகர ஆரம்பித்தது. இதைதொடர்ந்து, ஜெயலலிதா இடத்திற்கு சசிகலா வர முயன்றார்.

ஆனால் அதற்கு பன்னீர்செல்வம் இடையூறாக இருக்கவே அவரை முதலமைச்சர் பதவியை துறக்க சொன்னார் சசிகலா. இதனால் தனியாக கொதித்தெழுந்த பன்னீர் சசிகலாவை விட்டு பிரிந்து தனி அணியை உருவாக்கினார்.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், பெரும்பான்மையும் சட்டசபையில் நிரூபித்தார்.

ஆனால் துணை பொதுச்செயலாளராக வந்த டிடிவி தினகரன், சசிகலா செய்த தவறை இவரும் செய்ய முற்பட்டார். எடப்பாடியை பதவி விலக வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் எடப்பாடி விசுவாசமான அமைச்சர்கள் டிடிவியை ஒதுக்க ஆரம்பித்தார்கள். இதைதொடர்ந்து எடப்பாடி கோஷ்டிக்கும், டிடிவி கோஷ்டிக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இதனால் எடப்பாடி தனி அணியாக செயல்படுகிறாரா அல்லது பன்னீர் செல்வம் சொல்வது போல் சசிகலா கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.