தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தேர்தல் ஆணைய செயலர்  உமேஷ் சின்ஹா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இக்குழுவினரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கருத்துகளை தெரிவித்தனர். பின்னர், உமேஷ் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 80 வயதானவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி ஏற்படுத்தப்படும். விருப்பப்படும் முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், தமிழக தேர்தலில் புதிய தபால் ஓட்டு முறையை அனுமதிப்பதற்கு எதிரான திமுக., சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக தாக்கல் செய்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

ஆகையால், 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே தபால் வாக்களிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு இந்திய தேர்தல் ஆணையத்தில் அனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.