அதிமுக உறுப்பினர்களுக்கும், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கு செல்பவர்களுக்கும் பூங்குன்றனை தெரியாமல் இருக்க முடியாது. போயஸ் கார்டனின் 'கேட்' என்று வர்ணிக்கப்பட்ட  பூங்குன்றன், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கட்சிப் பத்திரிகையான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளிதழின் பதிப்பாளர், வெளியீட்டாளர் என்று ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்தவர்.

போயஸ் கார்டனுக்குள் நுழைய முற்படும் கட்சியினர், வி.ஐ.பி-கள்  யாராயினும் அவர்கள், பூங்குன்றன் கண்ணில் பட்டே ஆகவேண்டும். ஏனெனில், பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை கார்டனின் வரவேற்பறையை ஒட்டியே அமைந்திருந்தது. தவிர, பூங்குன்றனுக்குத் தனிப்பட்ட அதிகாரங்களையும் ஜெயலலிதா வழங்கியிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அப்படியே மாறிப் போனார் பூங்குன்றன். அரசியல்வாதிகளிடம் இருந்து ஒதுங்கி முழு நேர ஆன்மீகவாதியாகி விட்டார். தமிழகம் முழுவதிலும் என்ன ஆன்மீக சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வழிபடுதல் என்று தன்னையே அவர் மாற்றிக்கொண்டார்.

அவரது முகநூல் முழுவதும் ஆன்மீகம், தத்துவம் என நிரம்பி வழிகிறது. அண்மையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் , தினமும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் தர்மங்கள் என்ற தலைப்பில் திருமந்திரத்தை பதிவிட்டுள்ளார்.

இறைவனுக்கு பூஜை, யாகம், மாலை; பசுவிற்கு வைக்கோல் கட்டு, புண்ணாக்கு மூட்டை; ஏழைகளுக்கு விருந்து, அன்னதானம்; பிறர்க்கு பாராட்டு, தேவையில்லை. இவற்றை எல்லோராலும் செய்ய முடியாது. வசதி இருந்தாலும் மனம் இருப்பவர்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் திருமூலர் எல்லோராலும் செய்யக் கூடிய ஒன்றை சொல்லியிருக்கிறார். அதனை பின்பற்றி வாழ்வில் நமக்கு வரும் தடைகளை தகர்த்தெறிவோம்.

“யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.” 

பெரும் ஆளுமைத்திறன் அருகில் ஆண்டுக்கணக்கில் இருந்து பணி புரிந்த பூங்குன்றத் தற்போது முழுநேர ஆன்மீகவாதியாகி போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.