சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் சங்கரய்யாவிற்கு டாக்டர் கொடுக்கனும் - பொன்முடி
தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையான அக்கறையை ஆளுநர் ரவி கொண்டிருந்தால் மதுரை பல்கலைக்கழகம் தியாகி சங்கரய்யாவுக்கு வழங்க இருந்த கௌரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்
சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவருமான என்.சங்கரய்யா தமிழ் சமூகத்திற்கு தனது ஆற்றிய பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு சார்பாக தகைசால் தமிழர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கரய்யாவிற்கு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக அமைச்சர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
ஆளுநர் ஒப்புதல் கொடுக்கனும்
ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து இதற்கு இதுவரை எந்த வித பதிலும் வராத நிலையில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நாம் நினைவு கூற தவறியதாகவும் தமிழக சுதந்திரபோராட்ட வரலாறு தெரிந்து பேசுபவர் போல இன்று தமிழக ஆளுநர் ரவி பேசியுள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு சார்பில் தியாகி சங்கரய்யாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க அனுமதி வழங்கி கையொப்பமிட வேண்டும் என்றார்.
நீட் தேர்வு- மாணவர்களிடம் கெயெழுத்து
மேலும் நீட் தேர்வை பொருத்தமட்டில் தமிழகத்தின் நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எனக் குறிப்பிட்ட அவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 50 லட்சம் மாணவர்களிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பம் பெறப்பட்டு வருகிறது சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் வாயிலாக மாணவர்களிடையே நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பத்தை பெற்று அளிக்கலாம் என குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்