சங்கரையாவிற்கு டாக்டர் பட்டம்.! தமிழக அரசின் முடிவை எதிர்க்கும் ஆளுநர்- கையொப்பமிட மறுப்பு- வெளியான தகவல்
சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான என்.சங்கரையாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பிய நிலையில், கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ரவி மறுத்துள்ளார்.
சங்கரையாவிற்கு டாக்டர் பட்டம்
சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவருமான என்.சங்கரய்யா தமிழ் சமூகத்திற்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நூறு வயதை கடந்த சங்கரையாவிற்கு தமிழக அரசு சார்பாக தகைசால் தமிழர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுப்பு தெரிவித்த ஆளுநர்
இதனை தொடர்ந்து பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் 2 ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கையொப்பமிட மறுத்த ஆளுநர்
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் திரு.என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் மாண்புமிகு ஆளுநர் - வேந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.
மீண்டும் வலியுறுத்தல்
மேற்காண் நிலையில் 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திரு.என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு மாண்புமிகு ஆளுநர் வேந்தர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாமக பிரமுகர்களிடம் தீவிர விசாரணை.. என்ன காரணம் தெரியுமா?