சூலூர் தொகுதியில் வெற்றி பெற ஒரே அஸ்திரத்தை பலமாக நம்பி கையிலெடுத்து இருக்கிறார் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி. 

அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் இறந்ததால் சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சூலுார் தொகுதி கடந்த, 2011ல் புதியதாக உருவானது. 2011, 2016ல் நடந்த இரு தேர்தல்களில் திமுக போட்டியிடாமல், கூட்டணி கட்சியினர் போட்டியிட்டதால், திமுக உடன்பிறப்புகள் சோர்ந்து போயினர். இப்போது திமுகவே நேரடியாக களமிறங்குவதால் உற்சாகத்தில் இருக்கிறனர். அங்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மக்களவை தேர்தலுக்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். 

தான் வெற்றிபெற செண்டிமெண்டாய் ராசி பார்த்து, பழைய வீட்டுக்கே மாறி இருக்கிறார். சிங்காநல்லுார், கிருஷ்ணா காலனி வீட்டில் வசித்து வந்த அவர், இப்போது முன்பு குடியிருந்த பீளமேடு, பாரதி காலனி வீட்டுக்கே, மறுபடியும் குடியேறி விட்டார். ஏற்கனவே, திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தபோது பாரதி காலனி வீட்டில் தான் குடியிருந்தார்.

அதே போல், அமைச்சராக இருந்தபோது, தன்னை சுற்றி யார் யார் இருந்தார்களோ, அவர்களை தேடி தேடி அழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார். செண்டிமெண்டாக பொங்கலூர் பழனிசாமி வீட்டை மாற்றிய அறிந்த உள்ளூர்வாசிகள் 'பகுத்தறிவு பேசும் கட்சியில் இருந்து கொண்டு, இப்படி அநியாயத்துக்கு, 'சென்டிமென்ட்' பார்க்கிறாரே' என காதுகளை கடிக்கிறார்கள்.