பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது. 

அதோடு சேர்த்து ஆளுநர் உரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதி நீங்கலாக அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை நேற்று முன்தினமே  பிறப்பிக்கப்பட்டது. மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 102 அட்டை தாரர்களுக்கு ஆயிரத்து 980 கோடி ரூபாய் நிதி சிறப்பு திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தலைமைச்செயலகத்தில் முதற்கட்டமாக 10 பேருக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் நாளை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்த சிறப்பு பரிசு தொகுப்போடு 1000 ரூபாயையும் சேர்த்து பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடசென்னையில் பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் மற்றும் இலவச பொருள்கள் வாங்க ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக,  ராயபுரம் சட்டமன்ற தொகுதி MLA வும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விசிட்டிங் கார்டில் அவரே கையெழுத்திட்டு கொடுக்கப்பட்ட கார்டை பயன்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் மாநகராட்சி ஊழியர்களுக்கு நிர்ப்பந்திக்கின்றன. இதனால், வட சென்னையில் பல இடங்களில் பரபரப்பு ஏற்படுகிறது.