ஒரே ஒரு தொகுதி உள்ள புதுச்சேரியில் அகில இந்திய கட்சியான பாஜகவே போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 

பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் உள்ள நிலையில், புதுச்சேரி பாஜகவினரின் பேச்சு என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமியைத் தோற்கடித்தது. தற்போதும் பாஜக கூட்டணியில் இருப்பதாக அறிவித்துள்ள என்.ஆர். காங்கிரஸ், புதுச்சேரி தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. 

ஆனால், புதுச்சேரி பாஜக தலைவரும் நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், “புதுச்சேரியை பாஜகவுக்கு பெற்று தர தலைமையை வலியுறுத்துவோம்” என்று ரங்கசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சாமிநாதன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

“புதுச்சேரியில் தங்கள் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவார் என கூற கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், புதுச்சேரி தொகுதியை பா.ஜ.க.வுக்கு பெற்று தர வேண்டும் என எங்கள் கட்சி தலைமையிடம் வலியுறுத்துவோம். பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றால், புதுச்சேரிக்கென மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும். 

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறும். புதுச்சேரிக்கு பா.ஜ.க. அமைச்சர் வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பா.ஜ., வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கை. இதுகுறித்து கட்சித் தலைமையுடன் பேசுவோம். ஆனால், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்திருக்கிறார். 

புதுச்சேரி பாஜக தலைவரின் இந்தப் பேச்சு என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தி கொள்ள செய்திருக்கிறது. ஆனால், புதுச்சேரியில் பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்பதால், இதுபோன்ற விஷப் பரீட்சையை பாஜக மேலிடம் எடுக்காது என்று அக்கட்சியினர் கூறியிருக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.