பேரவையில்நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்ததால், சட்டப்பேரவையில் திங்கள்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தன்னுடைய ராஜினாமா கடித்தத்தை, சபாநாயகர் சிவக்கொழுந்தை சந்தித்து வழங்கினார். இதனால் முதலமைச்சர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்வார் என பேச்சு எழுந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.

பேரவையில்நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் நாராயணசாமி. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்தார். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், கிரண்பேடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தடையாக இருந்ததாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று காலத்தில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக செயல்பட்டதையும், விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள மானியத்தொகை குறித்தும், மக்களுக்காக புதுச்சேரி காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். a
