சாமியிடம் அழுத பொன்னார், சனங்களிடம் அழுகலையே ஏன்?: தமிழக பி.ஜே.பி.யை துவைத்து தொங்கவிடும் விமர்சனங்கள். 

சீன் 1:

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த போட்டோவும், செய்தியும் செம்ம வைரலாகியது! அது... சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியின் முன் நின்று மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குலுங்கி அழுது கண்ணீர் வடித்த காட்சி அது. ஐயப்பன் கோவிலுக்கு வரும் வழியில் உள்ள தடைகளையும், நெருக்கடிகளையும் நினைத்து அவர் அப்படி அழுததாக அவரது உதவியாளர்கள் கூறினர். 

கூடவே தன்னைப் பார்த்து அதிகார மிடுக்குடன் கேள்வி கேட்ட எஸ்.பி. யதீஷ் சந்திராவை பற்றி ‘இது போன்ற கேள்வியை கேரள முதல்வரிடம் அவரால் கேட்க முடியுமா?’ என்றும் வேதனையில் விம்மியிருந்தார்.மத்திய அமைச்சரையே அழ வெச்சுட்டாங்களே! என்று தேசம் கவனித்தது இதை. 

சீன் 2:

இந்நிலையில், அதே பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார். தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்த அவரை மக்களின் ரோடு மறியல் தடுத்து நிறுத்தியது. இறங்கி வந்து மக்களிடம் பொன்னார் பேசியபோது, “8 நாட்களாகியும் கரண்டு வரலை அய்யா! வாழ வழியில்லாம தினமும் செத்துட்டு இருக்கோம்.” என்று மக்கள் கண்ணீர்வடித்தனர், ஆதங்கப்பட்டனர். உடனே ‘நான் இதையெல்லாம் பார்வையிடதான் போயிட்டிருக்கேன்.’ என்றபடி அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து மின் கம்பங்களை உடனே சரி செய்ய சொன்னார். கூட்டம் நகர்ந்தது, வழி கிடைத்தது, பொன்னாரின் கார் பறந்தது. 

புயல் பாதித்த சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார் பொன்னார். மக்களின் அவலம், கண்ணீர், ஆதங்கம், ஆவேசம், நிம்மதியான வாழ்வுக்கான போராட்டம், நிற்கதி நிலை, பெயர்ந்து விழுந்த பல்லாயிரம் வீடுகள், ஒடிந்து விழுந்த பல லட்சம் தென்னைகள் என தன் மண்ணின் ஒரு பகுதி சேதத்தின் முன் மண்டியிட்டு செத்துக் கிடப்பதை பார்வையிட்டார். 

ஆனால் எந்த இடத்திலும் பொன்னார் கண்ணீர்விட்டார், குலுங்கியழுதார், ’என் மக்கள் நிலை இப்படியாகிவிட்டதே!’ என்று எங்கும் பேட்டி தந்ததாக செய்திகளுமில்லை, போட்டோவும் இல்லை. 

ஏன் பொன்னார் சார்?

’இதுதான் பி.ஜே.பி. இதுதான் தமிழர்களிடம் இவர்கள் காட்டும் பரிவு. இவர்களையா மீண்டும் நம்பப் போகிறோம்?’ என்று இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டுக் காட்டி உலுக்கி எடுத்து வருகின்றனர் விமர்சகர்கள்.