pon radhakrishnan tease thambidurai and admk
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்றது, பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு பன்னீர்செல்வம் அணியும் பழனிசாமி அணியும் இணைந்தது, சசிகலா மற்றும் தினகரனை ஓரங்கட்டியது என தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
முதல்வர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தாலும், இரட்டை இலை சின்னத்தை அவ்வளவு எளிதாக மீட்க முடியவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவருகிறது.
ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பிலும் தினகரன் தரப்பிலும் பிரமாணப் பத்திரங்களும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஓரங்கட்டியதால் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு எதிராக தினகரன் செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க இருதரப்பும் கங்கனம் கட்டிக்கொண்டு வேலை பார்த்துவருகிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதிலும் வழக்கை இழுத்தடிப்பதுமே தினகரனின் நோக்கம் என ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.
அதேபோல், அதிமுகவை அழிக்கவும் ஆட்சியை கவிழ்க்கவும் எதிர்க்கட்சியான திமுகவும் தினகரனும் முழுவீச்சில் செயல்படுவதாகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டிவருகிறது.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, அதிமுகவை அழிக்கும் சக்தியும் வலிமையும் எந்த கட்சிக்குமே கிடையாது என தெரிவித்தார்.
தம்பிதுரையின் இந்த கூற்றை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார். அதிமுகவை வேறு யாராலும் அழிக்க முடியாது உண்மைதான். ஏனெனில் அதிமுகவை அவர்களே அழித்துவிடுவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
