அது 50 ஆண்டுகள் பழமையான கார். 4 டயர் இல்லாத திமுக என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவராகி உள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட பாஜக அதிக வாக்குகளையும் கூடுதலான இடங்களையும் வென்றுள்ளது. தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார். இதனால், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது. இதே போன்ற போராட்டத்தை தமிழகத்திலும் நடத்த முயற்சிக்கிறார்கள்.


பிரசாந்த் கிஷோர் திறமைசாலிதான். தேர்தல் தொடர்பாக நுணுக்கங்கள் தெரிந்த டிரைவர். ஆனால், அவர் ஓட்டும் கார் ரேஸ் ஓட்ட தகுந்த கார் இல்லை. அது 50 ஆண்டுகள் பழமையான கார். 4 டயர் இல்லாத திமுக என்ற காருக்கு பிரசாந்த் கிஷோர் டிரைவராகி உள்ளார். கருணாநிதியின் திறமை, துரைமுருகன் போன்றவர்களின் தேர்தல் அணுகுமுறைகளை இப்போது திமுக  பயன்படுத்தவில்லை. 
எங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் எந்தப் பகையும் கிடையாது. யார் போவதாக இருந்தாலும் நெய்வேலியில் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. அந்த இடத்தில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி நிர்வாகம் சினிமா சூட்டிங்கிற்கு அமைச்சரை கேட்டு அனுமதி கொடுக்கவில்லை என நிர்வாகமே கொடுத்துள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் வீடு போன்றவை தாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு குளிர்விட தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.