கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். இதனால், கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. மேலும் கன்னியாகுமரி தொகுதி காலியாக இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கன்னியாகுமரி இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், அப்போது இடைத்தேர்தல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வசந்தகுமார், பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனை சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தொகுதியைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.