தமிழை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் பிரதமர் ஒருவர் இருந்தால் அவர் நரேந்திர மோடி மட்டும்தான் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று சென்னை வியாசர்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அமைச்சர்கள் யாரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று பார்வையிடவில்லை. முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அமைச்சர்களை கோயிலுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அத்திவரதரை தரிசித்து அருள் பெற வேண்டும் என வந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவத்தால் மனம் வேதனை அடைகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக கோயிலுக்கு முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் வர வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பக்தர்களை வர வேண்டாம் என சொல்லும் அளவுக்கு ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அவர் உடனே தனது வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும். இது தமிழகத்திற்கு தலைகுனிவான செயல் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிகாரிகளால் முடியாவிட்டால் திருப்பதியிலிருந்து நிர்வாகிகளை இங்கு வரவழைத்து ஏற்பாடுகள் செய்யலாம். பக்தர்களுக்கு குடிநீர், உணவு வசதிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. இந்தியை எதிர்க்கும் திமுகவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் அப்பள்ளிகளை மூடத் தயாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் பிரதமர் ஒருவர் இருந்தால் அவர் நரேந்திர மோடி மட்டும்தான். திமுக ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளை மூடத் தொடங்கினர். அதையெல்லாம் இப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சரிசெய்து வருகிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்  என்று பேசினார்.