நெல்லை கண்ணன் பேசியதன் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் பேசிய மேடையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். திட்டம் பற்றி திமுக, காங்கிரஸ் வி‌ஷம பிரசாரம் செய்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தவறான பிரசாரத்தை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்.  திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை அப்போது தூண்டி விட்டது. இப்போதும் அரசியல் லாபத்திற்காக மாணவர்களை தூண்டி விடுகிறது.

 
குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை பல முஸ்லிம் தலைவர்களும் மத குருமார்களும் தெளிவுப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியா வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுடன் அங்கிருந்து வந்த முஸ்லீம்களை ஒப்பிட்டு பேசக் கூடாது. இலங்கை தமிழர்களையும் இவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. 
பிரதமர், உள்துறை அமைச்சரை  நெல்லை கண்ணன் அவதூறாக பேசியதால்தான் போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். நெல்லை கண்ணன் பேசியதன் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் பேசிய மேடையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். உள்ளாட்சி அமைப்பில் கிராமப்புறங்களுக்கு தேர்தல் நடத்தியதைபோல், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். கன்னியாகுமரியில் பாஜக-அதிமுக கூட்டணி கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. வருங்காலத்தில் இதைவிட அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.