கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு எந்த பதவியும் இல்லாத நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன் ராதாகிருஷ்ணன் கமலாலயத்தில் தங்கிவந்த  அறையை காலி செய்துள்ளார்.   தமிழக பாஜக தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பொன்ராதாகிருஷ்ணன் .  மிக அமைதியாகவும் எளிமையாகவும் பழகக்கூடிய தலைவர் என்ற பெயர் இவருக்கு உண்டு .   கட்சிக்காகவே திருமணம்  செய்து கொள்ளாமல்  தனியாக வாழ்ந்து வருகிறார் பொன்னார் . சென்னை தியாகராய நகரில்  உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது .  கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அந்த அறையை பயன்படுத்தி வந்தார்.  

இந்நிலையில்  அவர்  மத்திய அமைச்சராக இருந்து வந்ததால் அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை , தற்போது  மத்திய அமைச்சர் பதவியும் அவருக்கு இல்லை ,   இதனால்  அவர்  தங்கியிருந்த அறையை காலி செய்து தரும்படி கமலாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது.  ஆனால் பொன்ராதாகிருஷ்ணன் அறையை காலி செய்ய மறுத்து வந்ததாக தெரிகிறது .  அறையை காலி செய்தே ஆகவேண்டும் என கறாராக  இருந்த கமலாலய நிர்வாகம் பொன் ராதாகிருஷ்ணனின்  அறையை  அதிரடியாக எச் ராஜாவுக்கு ஒதுக்கியது . அதாவது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத பொன். ராதாகிருஷ்ணனுக்கு  அறை வழங்கப்பட்டுள்ளது ஆனால் தேசிய செயலாளராக உள்ள எச். ராஜாவுக்கு  அறை இல்லையா.?  என அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர் .  இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டு ,  அதில் பொன் ராதாகிருஷ்ணன் கட்சித் தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என முனைப்பு காட்டி வந்தார்.

.  

எச்.ராஜாவும் பாஜக தலைவர் பதவிக்காக காய்களை நகர்த்தி வருகிறார்.   ஆனால் கட்சித் தலைவர் யார்  என்பதில் நீண்ட இழுபறி நிலவுகிறது. டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரே தமிழக பாஜக  தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.  அதுவரையில் எப்படியாவது அறையை  தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பொன்னார் போராடி வந்தார்.  டெல்லி தேர்தலுக்குள் பொன்னாரை காலிசெய்தே ஆகவேண்டும் என கட்சிக்குள் காய்கள் நகர்த்தப்பட்டதாக தெரிகிறது.  ஒரு கட்டத்தில்  கடும் நெருக்கடிக்கு ஆளான  பொன். ராதாகிருஷ்ணன் தனது அறையை காலி செய்துகொள்ள  முடிவெடுத்து அறையை காலிசெய்து வெளியேறியுள்ளார்.   கட்சிக்காக திருமணமே செய்து கொள்ளாமல் உழைத்த பொன்னாருக்கு ஒரு அறை  கூடவா வழங்கமுடியாது.?  என  அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.