தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியில் எழுதப்படுவதை குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அளித்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக நெடுஞ்சாலைகளில் இருக்கும் மைல்கற்களில் உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஹிந்தியில் எழுதப்பட்டு வருகிறது.

இதற்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக இணையதளவாசிகள் தங்களது எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி வந்துள்ள பொன்.ராதாகிருஷ்ணனிடம், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியில் எழுதப்படுவதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால்தான் இந்தியில் எழுதப்படுவதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு இந்தி தெரியாத நிலையில் பொது மொழியான ஆங்கிலத்தை அகற்றுவது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு முறையான பதில் அளிக்காத பொன்.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுத வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவு தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பாலு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்டது என்று கூறி அங்கிருந்து நழுவினர்.