காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தை ஒட்டி, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வர வேண்டாம்  என்று காஞ்சிபுரம்  மாவட்ட கலெக்டரே பத்திரிகைகள் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அந்நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

கிட்டதட்ட நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டே கலெக்டர் காஞ்சிபுரம் அத்தி வரதரை  தரிசிப்பதை  ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் பொன்னையனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதை விட்டு விட்டு தவிர்க்க வேண்டும் என அறிவித்திருப்பது தவறானது என கூறிய முதலமைச்சர், பாதுகாப்பை பலப்படுத்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டணம் தெரிவித்தார்.

“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் பாதுகாப்பு தர உங்களால் முடியாதா...மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.