ஜெயலலிதாவுக்கு பிறகான அ.தி.மு.க. அரசாங்கத்தை ‘மோடி அரசின் அடிமை ஆட்சி’ என்று சொல்லி வதக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின். ஆனால் இப்போதோ தமிழக பா.ஜ.க.வை அ.தி.மு.க. மிரட்டுகிறது, உடைக்கிறது! என்று எழுந்திருக்கும் தகவல்கள் அதிரவும், ஆச்சரியப்படவும் வைக்கின்றன. அதாவது தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தான் நீண்ட நாட்களாக பயன்படுத்திவந்த அறையினை சமீபத்தில் காலி பண்ணிவிட்டார் மாஜி மத்தியமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் மிக முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன். இந்த சம்பவத்தை ’தமிழக பா.ஜ.க.வில் பொன்னார் டம்மியாக்கப்படுகிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை.’ என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள். அவர்கள் மேலும் சொல்கையில்...”பொன்னார் மீது சமீப காலமா ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்கு போயிடுச்சு. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல் விவகாரத்தில் பொன்னாரை மிக வெளிப்படையாகவும், அதிர்ச்சி தரும் வகையிலும்  சாடுறார் தி.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ. அப்பாவு. இதற்கு நேர்த்தியான பதிலை சொல்லி, தான் சுத்தமான கைகளை கொண்டவன் என்பதை நிரூபிக்கவில்லை பொன்னார்! அப்படிங்கிறது டெல்லியின் எரிச்சல். பொன்னார் மீதான புகார்கள் தமிழக பா.ஜ.க.வின் மீதான புகார்களாகவே பார்க்கப்படுறதால் ரொம்பவே கோவமாயிடுச்சு டெல்லி தலைமை. 

இந்த நிலையில் தமிழக அரசுக்கு மத்தியரசு பாராட்டு விருது வழங்கியிருக்கும் நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலையை மையப்படுத்தி தமிழக அரசை சாடி தள்ளினார் பொன்னார். சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது, பயங்கரவாதம் ஆடுகிறது! என்றெல்லாம் போட்டு வெளுத்துவிட்டார். இதில் முதல்வர் கடும் அப்செட். முதல்வர் சார்பாக ஒரு தனி டீம் டெல்லி சென்று பா.ஜ.க. தலைமையிடம் பொன்னார் பற்றி மிகப்பெரிய புகார் பட்டியலை வாசிச்சிருக்காங்க. இதுக்கு இடையில் சுப்பிரமணியன் சுவாமியும் பொன்னாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். எல்லாம் சேர்ந்துதான் பொன்னாரை டம்மியாக்கிடுச்சு கட்சியில்.

இப்போ எங்க கட்சியில் பரபரப்பா என்ன பேசிக்கிறாங்கன்னா,  தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை டம்மியாக்குமளவுக்கு முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு டெல்லி பா.ஜ.க.வில் செல்வாக்கு உருவாகிடுச்சு. இதைப்பயன்படுத்தி அவர் தனக்கு வேண்டப்பட்ட பி.ஜே.பி.யினரை பற்றி மட்டும் நல்ல ரிப்போர்ட் கொடுக்கிறார். இதன் மூலமா கட்சியையே உடைக்கப் பார்க்கிறார்!ங்கிற அளவுக்குப் பேசுறாங்க. இது பச்சைப்புள்ளை தனமாக இருந்தாலும், ஒரு விதத்தில் உண்மைதான். முதல்வர் எடப்பாடியாரின் இன்ஃபுளுயன்ஸ், தமிழக பா.ஜ.க.வில் நிறையவே இருக்குது. அவருக்கு ஆதரவா ஒருகோஷ்டி எங்க கட்சியில் சிறப்பா செயல்படுது.” என்கிறார்கள். 
ப்பார்றா!