தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுத்துக்கள் எழுதப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த செயலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அவர்தான் இந்த நடைமுறையை செயல்படுத்தினார் எனவும், திமுக அவர்கள் முகத்தில் கருப்பு மை பூசி கொள்ளட்டும் என தெரிவித்தார்.

இதனிடையே மைல் கல்லில் இந்தியில் எழுதியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பொறுப்பற்ற பேச்சு வெட்கப்படவேண்டிய ஒன்று என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றசாட்டிற்கு டி.ஆர் பாலு விளக்கமளித்துள்ளார்.

மத்தியில் திமுக இருந்தபோது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றசாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தான் மத்திய அமைச்சராக இருந்தபோது ஊர் எல்லையில் மாநில மொழியில் பெயர் இருக்க வேண்டும், அடுத்தடுத்து ஆங்கிலம், பின்னர் இதர மொழிகள் என வகைபடுத்த பட்டு உத்தரவிடப்பட்டன என தெரிவித்துள்ளார்.