பொள்ளாச்சியில் முகநூலில்  நண்பர்களாகி  மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் வெளியானது. இது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணகி பாக்கியநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கை அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்பதில் நாங்கள் கவனமதக இருக்கிறோர் எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சனையில் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம் என்று குறிப்பிட்ட கண்ணகி பாக்கியநாதன்,  இவ்வளவு ஏன் தேவைப்பட்டால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடமும் விசாரணை நடத்துவோம் என்று அதிரடியாக தெரிவித்தார்.

ஆனால் இந்த பாலியல் சம்பவத்தில் தனது மகனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் கட்டவிழ்த்து விடும் பொய் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி வருகிறார்.