பொள்ளாச்சியில் முகநூலில் பெண்களுக்கு நண்பர்களாகி அவர்களை  ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து  தற்போது சிபிஐ  விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.  கே.சி.பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமனை ராஜினாமா செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி  விவகாரம் தமிழக மக்களின் மனதை கரைய வைக்கும் சம்பவம் என்றும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தாலும்  அதை மக்கள் ஏற்கவில்லை என்று கேசிபி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள கட்சி. ஜெயலலிதா இருந்தால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமன் மிகவும் நல்லவர், பண்பானவர். ஆனால் தேர்தல் நேரத்தில் இப்படி நடக்க கூடாது.

பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். அ.தி.மு.க.வுக்கு கெட்டப்பெயர் ஏற்பட கூடாது எனில் இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய பதவியையும், கட்சி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவுக்குள் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தாலும். தற்போது பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக கட்சிக்குள் ஒரு கலகக் குரல் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கே.சி.பழனிசாமி கடந்த பல மாதங்களாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அணிமையில் தான் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.