தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுக இப்போதே தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்சியின் செயற்குழுவை நாளை கட்சியின் தலைமை அலுவலகத்தில்  அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9.45 மணிக்கு செயற்குழு நடக்கிறது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளடக்கிய செயற்குழுவில் சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடிய உயர்மட்ட கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும், முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டத்திலும் நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில்,  தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், சிகிச்சைக்காக  சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அதிமுக செயற்குழு கூட உள்ள நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.