அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு துளி கூட அரசியல் செய்யாமல் அமைச்சர் பதவி வரை சென்றவர் என்றால் அது துரைகண்ணுவாக மட்டுமே இருக்க முடியும்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர் துரைகண்ணு. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே விவசாயியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். தீவிர எம்ஜிஆர் ரசிகர். இதனால் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த உடன் அதிமுகவில் இணைந்தவர். அதற்கு முன்பு எந்த கட்சியிலும் துரைகண்ணு இருந்தது இல்லை. அதே போல் அதன் பிறகும் வேறு எந்த கட்சிக்கும் செல்லாதவர். கிட்டத்தட்ட 50 வருடங்களாக அதிமுகவில் இருந்தாலும் அதிகபட்சமாக துரைகண்ணுவுக்கு கிடைத்த பதவி பாபநாசம் ஒன்றியச் செயலாளர் பதவி தான்.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கூட அண்மையில் தான் துரைகண்ணுவுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு அமைச்சராக இருந்தாலும் ஒன்றியச் செயலாளர் பதவியில் தான் துரைகண்ணு நீடித்துக் கொண்டிருந்தார். இதற்கு காரணம் துரைகண்ணுவின் ஜாதி. ஆம் தஞ்சை மாவட்டம் என்றால் கள்ளர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி மாவட்டச் செயலாளர் பதவி பெரும்பாலும் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும்.

இதன் காரணமாக அதிமுகவிற்காக கடுமையாக உழைத்தாலும் துரைகண்ணுவால் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு தான் முன்னேற முடிந்தது. ஆனால் இதனை எல்லாம் எதிர்பார்த்து துரைகண்ணு அரசியல் செய்யவில்லை. அதே போல் கடந்த 2006ம் ஆண்டு தான் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட துரைகண்ணுவுக்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அதுவும் எப்படி தெரியுமா? துரைகண்ணு போட்டியிட்ட பாபநாசம் தொகுதி முழுக்க முழுக்க மூப்பனார் எனும் ஜாதி பெரும்பான்மையாக இருக்க கூடியது. மேலும் மறைந்த த.மா.கா தலைவர் மூப்பனாரின் சொந்த தொகுதி.

இதனால் இந்த பாபநாசம் தொகுதியில் மூப்பனார் குடும்பர் கைகாட்டும் நபர் தான் ஜெயிக்க முடியும். அந்த வகையில் 2006ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் வலுவான கூட்டணி இல்லை. இதனால் பாபநாசம் தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பாபநாசம் தொகுதியில் போட்டியிட அதிமுக பெருந்தலைகள் யாரும் முன்வரவில்லை. சொல்லப்போனால் அந்த தொகுதியில் போட்டியிட எந்த பிரபல அதிமுக நிர்வாகியும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வேறு வழியே இல்லாமல் துரைகண்ணு ஒன்றியச் செயலாளர் என்கிற வகையில் அந்த தொகுதியை அவருக்கு வழங்கினார் ஜெயலலிதா.

பாபநாசம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது துரைகண்ணு அய்யம்பேட்டை அருகே உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கட்சிக்காரர்கள் வந்து நீங்கள் தான் பாபநாசம் வேட்பாளர் என்று கூறிய போதும், அப்படியா? என்று கேட்டுவிட்டு எஞ்சிய டீயை குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் துரைகண்ணு என்பார்கள். அதே சமயம் துரைகண்ணுவிற்கு கட்சித் தொண்டர்களுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர்களின் வீட்டு விஷேசத்திற்கு தவறாமல் சென்றுவிடுவார்.

மேலும் மாற்றுக்கட்சியினரிடம் கூட துரைகண்ணு அன்பாக பழகக்கூடியவர். எளிமையான அரசியல்வாதி என்பதால் 2006 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜி.கே.வாசன் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராம்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் துரைகண்ணு. ஆனால் இதன் பிறகும் கூட பெரிய அளவில் எந்த அரசியலும் துரைகண்ணு செய்தது இல்லை. அமைச்சர் பதவியை எதிர்பார்த்து சென்னையில் தவம் கிடக்கவில்லை. மாறாக தனது ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளை மட்டுமே கவனித்து வந்தார்.

இதன் பிறகு தொடர்ந்து 3 தேர்தல்களில் வென்ற நிலையில் 2016ம் ஆண்டு முதன்முறையாக அமைச்சரானார் துரைகண்ணு. இதுவும் கூட தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவிற்கு வேறு எம்எல்ஏ இல்லை என்பதால் தான் துரைகண்ணுவுக்கு கிடைத்தது. ஆனால் அதனை திறம்பட கையாண்ட துரைகண்ணு அமைச்சரான பிறகும் கூட ஒன்றியச் செயலாளர் என்கிற அளவில் தனது அரசியலை வைத்துக் கொண்டார். மாவட்டச் செயலாளர் பதவி, மாநில பதவி என்றெல்லாம் அவர் அல்லாடவில்லை. இதனால் தான் துரைகண்ணுவை அரசியல் செய்யாத ஒரு அரசியல்வாதி என்று கூறுகின்றனர் தஞ்சை ஜில்லாவில். அவரது மறைவு அதிமுகவிற்கு மட்டும் அல்ல பாபநாசம் தொகுதி மக்களுக்கும் ஒரு இழப்பு தான்.