Political viewers are comments on vijayakanth gen sec his party

கட்டுரையை ‘புலியை பார்த்து பூனை சூடு...’ என்று கூட துவங்கலாம்! ஆனால் அந்த புலி இன்று உலகில் இல்லை. மேலும் கனகம்பீரமாக ஆட்சி புரிந்த அந்த புலியின் கடைசி நேரத்து வாழ்க்கை புல்லின் வேரில் ஒளிந்து வசிக்கும் சிறு பூச்சிக்கு இருக்கின்ற அடிப்படை மரியாதையை கூட பெறாமல் ரகசியமாகவே கழிந்ததும், அது கட்டி அரசாண்ட ராஜ்ஜியம் அதன் மறைவிற்குப் பின் மதயானைகள் புகுந்த மணல் மேடுகள் போலவும் மாறிப்போன கொடுமையை என் சொல்வது?...

உங்களுக்குப் புரிந்திருக்குமென்று சர்வ நிச்சயமாய் நம்புகிறோம். அந்த புலி ஜெயலலிதாவேதான்! அவரது பாணியில் தன் கழகத்தின் ‘நிரந்தர பொதுச் செயலாளர்’ என பட்டம் சூட்டிக் கொண்டிருப்பவர் விஜயகாந்தான். 
தமிழக அரசியல் கலவரக்காடாக கிடக்கும் சூழலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 12_வது செயற்குழு மற்றும் பொதுக்குழுவை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூட்டினார். எல்லோரும் வடக்கு நோக்கிக் கொண்டிருக்கும் போது தென்மேற்கே நின்று தனியாவர்த்தனம் செய்வதுடன், கணிசமானோரை தன் பக்கம் திரும்பவும் வைத்த அதிசய அரசியல்வாதிதான் விஜயகாந்த். ஆனால் அதெல்லாம் ஒரு காலம். இப்போது அவரது கட்சியில் மாவட்ட செயலாளர் போஸ்டிங்குக்கே தினசரி பத்திரிக்கையில் ‘வான்டட்’ என்று வரி விளம்பரம் கொடுக்க வேண்டிய சூழலில் அவரது செயற்குழுவும், பொதுக்குழுவும் மீடியாக்களில் வெறும் ஸ்க்ரோலிங்கோடும் கடந்து விடுமென்று விஜயகாந்துக்கும் தெரியும். அதனால்தான் வைத்தார் ஒரு ட்விஸ்ட்...

கழகத்தில் நிரந்தர பொதுச்செயலாளர் எனும் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் விஜயகாந்தை அமர வைக்க திட்டமிட்டனர். காரைக்குடியில் இன்று நிகழ்வுகள் துவங்கி நகர்ந்ததும், இந்த புதிய பதவியை அறிவிக்கும் சூழல் வந்தது. அறிவித்தார்கள், கேப்டனும் அதை ஏற்றுக் கொண்டார். அதேபோல் கழக துணைச்செயலாளர்களாக சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

கட்சிக்குள் நிர்வாகிகளின் இந்த பதவி மாற்றங்கள் இரண்டாம் நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது? என்று ஊடுருவிப்பார்த்தால் ஆளாளுக்கு புதிராக முழிக்கிறார்கள். 

’ஏற்கனவே கட்சியின் தலைவரா கேப்டன் இருந்தார். இப்போ அவரை நிரந்தர பொதுச்செயலாளரா ஆக்கியிருக்காங்க. இது என்ன பதவி உயர்வா? இல்லே என்னான்னு புரியலை! இதை எப்படி எடுத்துக்கணும்னும் தெரியலை.’ என்று புலம்புகின்றனர் நிர்வாகிகள். 
நிர்வாகிகளோ ‘எங்க கட்சியோட நிலை எவ்வளவு மோசமா கெடக்குதுன்னு நாங்க விளக்கித்தான் தமிழ்நாட்டுக்கு தெரியணுமுன்னு அவசியமில்லை. அதிலேயும் தலைவரோட உடல் நிலையும் அசெளகரியமான நிலைக்கு போயி இப்போதான் ஏதோ கொஞ்சம் தேறி நிற்குது. 

இந்த நிலையில செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுற முடிவெடுத்த தலைவர் சில ஜோஸியக்காரர்களை பார்த்து கட்சியோட எதிர்காலம் பற்றி கேட்டிருக்கார். அப்போ ‘நீங்க தலைவர் அப்படிங்கிற நிலையிலிருந்து மாறி வேற இடத்துக்கு போனீங்கன்னா, உங்களையும் உங்க கட்சியையும் பிடிச்சிருக்கிற பிரச்னைகள் தீரும்.’ அப்படின்னு சொன்னாராம் ஒரு பிரபல ஜோஸியர். அதோட விளைவே இந்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியேற்பு.

கட்சி தொடர்பான எத்தகைய அதிகாரமும் எடுக்கும் முடிவு விஜயகாந்துக்கு உண்டு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்குறதுல எல்லாம் எந்த அதிசயமும் இல்லை. ஏற்கனவே அப்படித்தானே போயிட்டிருந்துச்சு. இப்போ இதுல என்ன புதுசு இருக்குது.
ஜெயலலிதா மாதிரி ‘கழக பொதுச்செயலாளர்’ அப்படின்னு பதவியும், அதில் ‘நிரந்தரம்’ எனும் அடைமொழியும் சேர்த்துக்கிட்டா மட்டும் போதுமா அந்தம்மாவோட ஆளுமையிலேயும், சிக்கலான நேரத்துல புத்திகூர்மையா முடிவெடுக்கிற திறனும் இருந்திருந்தா இந்நேரம் எங்க கட்சி இப்படியொரு மோசமான சூழல்ல சரிஞ்சு கிடக்குமா? மத்திய அரசோட கண்ணில் விரலை விட்டு ஆட்டிய லேடி அந்த அம்மா. ஆனா கட்சியை விட்டு பறக்க துடித்த தலைமை கழக நிர்வாகிகளை பிடிச்சு வைக்கிற சூட்சமம் எங்க தலைவருக்கு இருந்ததில்லை. சுயநினைவோடு இருக்கும் வரையில் மாஜி அமைச்சர்களை கிளைச்செயலாளராக நியமித்து அடக்கி வைக்கிற தைரியம் அந்த அம்மாவிடம் இருந்துச்சு. ஆனா கட்சியின் கொ.ப.சே. துவங்கி பல நிர்வாகிகள் உட்கட்சிக்குள் இருந்து கொண்டே விமர்சித்தபோது அவர்களை அடக்கிடும் துணிச்சல் எங்கள் தலைவருக்கு இருந்ததில்லை. நினைவில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சையிலிருந்த போதும் கூட அமைச்சர்களை கிரீன்வேஸ் சாலையில் ராப்பகலாய் காத்துக் கிடக்க வைத்திருந்தது அந்தம்மாவின் ஆளுமை. ஆனால் இன்று ‘மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் கேப்டன் எனக்கு.’ என்று ஒரு நிர்வாகி தலைமையிடம் நேருக்கு நேர் வாதாடும் வகையில் இங்கே நிலைமை இருக்குது. 

பார்த்தசாரதியும், இளங்கோவனும்தான் கட்சின்னு தலைவர் நினைச்சுட்டிருந்தா அது அவரோட அறியாமை. சுதீஷ்தான் தனக்கு இணையான கழகத்தின் அடுத்த நம்பிக்கைன்னு அண்ணி பிரேமலதா நினைச்சுட்டிருந்தா அது மகா அவலம். 

பதவியை மாற்றியாச்சு ஆனா பிஹேவியர் மாறணுமே! மண்டைய மறைச்சாலும் மண்டைக்கு மேலே இருக்கிற கொண்டை மறையலையேன்னு பிஹேவ் பண்ணுனா இந்த கட்சியோட தலைவிதி மாறவே மாறாது.” என்று புலம்புகிறார்.

நிர்வாகிகளின் ரியாக்‌ஷன் இப்படியிருக்கும் நிலையில் நிகழ்வில் மைக் பிடித்த பிரேமலதா “இன்னும் 4 நாட்களில் தீர்ப்பு வரும். அதன் பிறகு இந்த ஆட்சி கவிழும், ஆளுநரின் ஆட்சி தமிழகத்தில் அமையும். அதற்காகவே இன்று புதிய ஆளுநரை அறிவித்திருக்கிறார்கள்.” என்று பட்டாசு ஒன்றை கொளுத்தியிருக்கிறார். 

மனைவியின் மெர்சல் மேடை பேச்சை வழக்கம்போல் நாற்காலியில் அமர்ந்து நாக்கை சுழற்றி சிரித்து ரசித்திருக்கிறார் கழக தலைவர்!...மன்னிச்சுக்குங்க எசமான்...கழக நிரந்தர பொதுச்செயலாளரான விஜயகாந்த்.