தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததுபோல தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
 கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாநில அரசுகள் 1 - 9ம் வகுப்புகள் வரையிலான பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு என்பதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுவது கேள்விக்குறியாகிவருகிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் பொதுத்தேர்வுகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி முதல்  பத்தாம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு விடாப்பிடியாக உள்ளது.

 
இந்நிலையில், தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனவே 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை. எனவே, ஏற்கனவே பள்ளிகளில் பெற்ற இன்டர்நெல் மதிப்பெண்களின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளார்.


தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது காலமறிந்து, மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட பாராட்டத்தக்க முடிவு. தமிழக அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்று நம்புவோம்!” என்று தெரிவித்துள்ளார்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10ம் வகுப்புத் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் தமிழ்நாட்டில் மட்டும் பழனிசாமி அரசு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவது என்று பிடிவாதம் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. தேர்வுத்துறை இணை இயக்குநரே கொரோனா பாதிப்புக்கு ஆளான பிறகும் அரசு விடாப்பிடியாக நிற்கிறது. கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர்நீதிமன்றத்தில் சொல்லும் தமிழக அரசுக்கு,மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி கவலையில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.