தஞ்சாவூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் தஞ்சாவூரில் ஊர்வலமாக சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்கள் சார்பில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தி.க. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமர்சிங் தலைமை வகித்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், நகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கையில் பெரியார் மற்றும் லெனின் படங்கள் இருந்தன.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். 

பெரியார் சிலையை உடைத்தெறிவோம் என்று பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவை கண்டிக்கிறோம்" என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், நகர அவைத்தலைவர் ஆறுமுகம், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, தி.க.வை சேர்ந்த அய்யனார், முருகேசன், வெற்றி, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவி.மோகன், ம.தி.மு.க. பேச்சாளர் விடுதலைவேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.