வரும் மக்களவை தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளிடையே பிரளயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை அரசியல் கட்சி தலைவர்களும் அதிரடி திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

 

வாரிசு அரசியலை எதிர்த்தும், அல்லது வாரிசு அரசியலை தொடர மாட்டோம் என வாக்குறுதி அளித்து கட்சி நடத்தும் தலைவர்களும் இப்போது தங்களது வாரிசுகளை கட்சியில் வளர்த்து விட துடிக்கின்றனர். அதன்படி தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் பலரும், எம்.பி., ஆசையில் துடித்து வருகிறார்கள். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலுார் தொகுதிக்கும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, கள்ளக்குறிச்சி தொகுதிக்கும், திருவண்ணாமலை தொகுதிக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனும் குறி வைத்திருக்கிறார்களாம். 

அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் வினோத், சேலம் தொகுதியை குறி வைத்து, சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளார். அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன், தற்போது தென்சென்னை தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஒருவேளை தென்சென்னை கிடைக்காவிட்டால் வடசென்னைக்கு மாறவும் அவர் தயாராக இருக்கிறார்.

 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், தற்போது ராஜ்ய சபா, எம்.பி.,யாக இருந்து வருகிறார். ஆகியால் எம்.பி தேர்தலில் சிவகங்கை தொகுதியில், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்க பணிகளை தொடங்கி விட்டார். இன்னும் எந்தெந்த கட்சிகளில் இருந்து வாரிசுகள் களமிறங்கப்போகிறார்கள் என்பது தேர்தல் நெருங்கும் வேளையில் தெரிய வரும்.