நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா  தளத்திலிருந்து அதன் துணைத் தலைவரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார்.
பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியூ) பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. ஜேடியூ கட்சியின் துணை தலைவராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுவருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரங்களில் ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால், பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு  தெரிவித்துவந்தார். இதனால், நிதிஷ்குமாரை பிரசாந்த் கிஷோர் விமர்சித்துவந்தார். இதனால் ஜேடியூ கட்சிக்குள் சலசலப்பு நிலவிவந்தது.

 
இந்த விவகாரத்தில் நிதிஷ்குமாருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு மோதல் முற்றிய நிலையில், “பிரசாந்த் கிஷோர் எங்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு செல்லலாம். அவருக்கு எந்தத் தடையும் இல்லை” என அவர் கட்சியை விட்டு வெளியேறுமாறு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்சி முடிவுக்கு மாறாக கருத்து தெரிவித்த காரணத்தால் பிரசாந்த் கிஷோரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜேடியூ கட்சி அறிவித்தது. இதுபோன்ற விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மாவையும் ஜேடியூ நீக்கியது.


பிரசாந்த் கிஷோரை கட்சியிலிருந்து ஜேடிஎஸ் நீக்கியுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி நிதிஷ் குமார். பீகார் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என தெரிவித்துள்ளார்.