இறைத்தூதரை நிந்தனை செய்ததும், காவல்துறையின் அலட்சியப் போக்குமே பெங்களூரூ அமைதியின்மைக்கு காரணங்கள் என SDPI கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் உள்ள ட.ஜே ஹல்லி பகுதியில் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை நிந்தனை செய்த அடாத செயலையும், நிந்தனை செய்த குற்றவாளிகளை கைதுசெய்ய காவல்துறை வேண்டுமென்றே கடைபிடித்த தாமதத் தந்திரத்தையும், கொந்தளிப்பைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் தோல்வியையும், துப்பாக்கிச்சூட்டையும் கர்நாடகா மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் அப்துல் ஹன்னான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாவது; இஸ்லாத்தையும், அதன் மேன்மைமிக்க தூதரையும் இழிவுபடுத்தி, நிந்தனை செய்தும் மற்றும் கேலிச்சித்திரம் வரைந்தும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகானந்தா ஸ்ரீநிவாஸின் மருமகன் நவீன் என்பவரால் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து அப்பகுதி மக்கள் மாலை 7 மணியளவில் பெங்களூரூ டிஜே ஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் உதவி ஆணையராலும், ஆய்வாளராலும் வேண்டுமென்றே 2 மணி நேரம் காக்கவைக்கப்பட்டனர். இரவு 11:30 மணி கடந்தும் புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. பகுதி மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதால் குற்றவாளியைக் கைதுசெய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தில் மக்கள் அதிகளவில் கூடினர். இதையடுத்து உள்ளூர் காவல் அதிகாரிகள் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள், உள்ளூர் உலமாக்கள் மூலம் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கையில், வெளியிலிருந்து வந்த காவல்படை காவல்நிலையம் முன்பு இருந்த கூட்டத்தை கலைப்பதாக கூறி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் மதிப்புமிக்க மூன்று உயிர்கள் பலியானது. காவல்துறை பொறுப்புடன் நடந்திருந்தால் தேவையற்ற அசம்பாவிதம் நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்கும். 

இதற்குமுன் உள்ளூர் இளைஞர் சமூக ஊடகத்தில் தவறான கருத்து வெளியிட்டபோது, காவல்துறை 10 நிமிடங்களில் அவரைக் கைது செய்தது. ஆனால், இப்போதோ காவல்துறை அரசியல் அழுத்தத்தால் அல்லது ஒருதலைபட்சமான அணுகுமுறையால் வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தைக் கையாண்டது.எப்படியாயினும், காவல்துறையின் அலட்சியப்போக்கு, மதபாகுபாடு, உளவுத்துறைத் தோல்வி போன்ற காரணங்களால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. வழக்கமாக முழங்காலுக்குக் கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தும் காவல்துறை, நீதி கேட்ட மக்களின் நெஞ்சுக்கு நேராக சுட்டதால் மூன்று நபர்கள் பலியானது வன்மையான கண்டனத்துக்குரியது.

இத்தகைய அசாதாரண சூழலுக்கு காவல்துறையின் அலட்சியப்போக்கும், மதவெறிப்பிடித்த குற்றவாளியை தாமதிக்காமல் கைதுசெய்ய அதிகாரிகள் பின்வாங்கியதுமே காரணங்களாகும் என்று அப்துல் ஹன்னான் தெரிவித்தார். அப்துல் ஹன்னான் மேலும் கூறுகையில், சில உள்ளூர் தலைவர்களையும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தும் காவல்துறையின் ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. உண்மையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்கள் போலீஸ் மற்றும் உள்ளூர் உலமாக்களின் முன்னிலையில் பலமுறை மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், காவல்துறையின் இந்த பக்கச்சார்பான நடவடிக்கை காவல்துறையின் நேர்மை, செயல்திறன் மற்றும் நெறிமுறைகள் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. காவல்துறையின் தோல்வியை மறைக்கவும், இந்த பிரச்சினையை பொதுமக்களின் மனதில் இருந்து திசைதிருப்பவும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு எதிராக இப்பிரச்னை திசைதிருப்பப்படுகிறது. 

இத்தகைய அநீதியானது, நீதி, சமத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கடுமையாக உழைக்கும் எஸ்.டி.பி.ஐ. தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தன்மையை ஒருபோதும் குறைக்காது என்றும் ஹன்னான் தெரிவித்தார். வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் மற்றும் கலவரங்களைத் தூண்டும் வகையில் இறைத்தூதரை நிந்தனை செய்த நவீன் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவித்து, கொந்தளிப்பை உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி, தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹன்னான் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.