பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவானது கடந்த 5-3-2019 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் காவல் கூடுதல் இயக்குனர் அவர்களின் தலைமையில், இரண்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையாளர் ஆகியோரை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்களின் கீழ் ஒவ்வொரு அலகும் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையிலும் இயங்கி வருகிறது.

இந்த அலகானது பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு ICUAW சிறப்பு சிறார் காவல் பிரிவு SJPUC,வரதட்சணை தடுப்பு பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகிய அலகுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. சென்னை பெருநகரத்தில் காவல் ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் 3-6-2019 அன்று முதல் ஒரு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 12 காவல் மாவட்டங்களில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கூடுதல் துணை ஆணையாளர் நியமிக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டப்படியான, கட்டாயமான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் சமுதாயத்தில் துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து நீதி கிடைத்திட சீரிய முறையில் முழுமையான உத்வேகத்துடன் பணியாற்றுவதே இந்த அலகின் நோக்கமாகும். மேலும் சரியான வழக்குகளை பதிவு செய்து குறித்த நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்து கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனைகள்  கிடைக்கவும், பாதிக்கப்பட்டோர் அச்சூழலில் இருந்து விடுபட்டு கண்ணியமாக வாழ்வதற்கு மறுவாழ்விற்கு தேவையான உன்னத பணியை செய்து வருகிறது.

 பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் வழக்குகளில் பல்வேறு புலனாய்வு நிறுவனங்களுடன் இணைந்து கடும் குற்றங்கள் புரியும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட விசாரணையை தீவிரமாக தொடர்ந்து, குற்றங்களை குறைக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகை பெற்றுத் தரவும், முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

 அம்மா ரோந்து வாகனம்

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் அனைத்து நவீன வசதிகள் பொருந்திய இன்னோவா  கிரிஸ்டா வாகனத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26-8-2019 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும் இவ்வாகனம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாதல், குழந்தை திருமணம், ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் 35 அம்மா ரோந்து வாகனங்களும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப ஆலோசனைகள், குழந்தைகளை வீட்டில் தனியாக விடப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தல், ஆகிய பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு, சேரிகள், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதிகள், இல்லங்கள், மருத்துவமனைகள், ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி விளக்கிக் கூறியும், போதைக்கு அடிமையாதல் மற்றும் சமூக அச்சுறுத்தல்கள் ஆகியவற்றில் தடுக்க முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும் அம்மா ரோந்து வாகனம் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளது.  தற்போது இணையதள குற்றங்கள் பெருகி வரும் சூழலில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கு இணையதள பாதுகாப்பு குறித்தும், யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிர கூடாது என்றும், தகுந்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் கணினிகளை பயன்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், கடந்த 3-8-2019 அன்று மாண்புமிகு நீதியரசர்கள், எஸ்.மணிக்குமார், எஸ்.ராஜா எம் .எஸ் ரமேஷ், திருமதி ஆர்.ஹேமலதா ஆகியோர்களின் முன்னிலையில் சமூக நலத்துறை ஆணையாளர், காவல் ஆணையாளர் ஆகியோருடன் நடத்தப்பட்டது. இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு, 

35 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழில்நுட்ப முன்னேற்றம், சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், பேரங்காடிகள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள், ஆகிய இடங்களில் நடத்தி காவலன் SOS செயலியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து, அவசர காலத்தில் பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வானொலி, பண்பலை, பத்திரிகை ஊடகம், ஆகியவற்றின் மூலம் காவலன் SOS செயலி பயன்பாட்டை விளக்கி இணையதள குற்றங்கள் நடக்காமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட மற்றும் உதவிகள் தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முகநூல் (Facebook) கீச்சகம் (Twitter)கணக்குகள் துவங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டும். உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. என பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.