முதலமைச்சர் அளித்த 4 பக்க அறிக்கையை காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் படித்தார். போராட்டத்தை கைவிட்டு விடும் படி பேசினார். ஆனால் இளைஞர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

தமிழகம் முழுதும் கடந்த நான்கு நாட்களாக , அலங்காநல்லூரில் 3 நாட்களாக , சென்னையில் 2 வது நாளாக வாலிபர்களின் போராட்டம் கிளர்ந்தெழுந்துள்ளது.

போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக அலைஅலையாய் திரளும் வாலிபர்கள் மாணவர்களால் மெரினாவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் 8 முறை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

ஆனாலும் போராட்டக்காரர்களின் கோபாவேசம் அடங்கவில்லை. இதனிடையே முதல்வர் ஓபிஎஸ் 4 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தவிர நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்கள் மத்தியில் மைக்கில் படித்தார், அப்போது அவர்மீது வாட்டர் பாட்டில் , வாட்டர் பாக்கெட்டுகள் வீசப்பட்டது. 


அதைபார்த்த அவர் இது போன்று என்னாலும் செய்ய முடியும், ஆனால் அது சரியல்ல என் மீது வாட்டர் பாட்டில் , பாக்கெட்டுகளை எரிவது தமிழர் வீரமல்ல என்று கூறினார். இதைகேட்டு அவர் மீது பாட்டில் எரிந்தவர்கள் அமைதியானார்கள்.

பின்னர் பேசிய அவர் அன்போடு கேட்டு கொள்கிறேன் தயவு செய்து போராட்டத்தை கைவிடுங்கள் , முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நல்ல தீர்வு ஏற்பட வழி செய்யும் எங்கள் கோரிக்கை ஏற்று அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுகொண்டார்.


ஆனால் இளைஞர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்கள். இதனால் போராட்ட களத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.