கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே ஆஃபீசர் , வடிவேல் பட காமெடி போல் சட்டசபைக்குள் மாறுவேடத்தில் நுழைந்த போலீஸ் அதிகாரிகள் புகைப்படம் வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சட்டசபையில் இன்று நடந்த திமுகவினர் மீதான தாக்குதலில் வெளியிலிருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் மாறுவேடத்தில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக திமுக தரப்பில் புகார் கூறப்பட்டது. அது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


இந்நிலையில் மீண்டும் சபை 1 மணிக்கு கூடியது. மீண்டும் பிரச்சனை ஏற்படவே சபை காவலர்களை அழைத்து திமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர். இதில் தங்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது . கடுமையாக தாக்கப்பட்டோம். எனது சட்டை கிழிந்தது என்று கிழிந்த சட்டையுடன் வெளியில் வந்த ஸ்டாலின் கவர்னரிடம் நேரில் புகாரும் அளித்தார்.


அதிக அளவில் வெளியிலிருந்து போலீசார் மார்ஷல் வேடத்தில் வந்து தாக்கிலையில் அதை நிருபிக்கும் வகையில் போலீஸ் உயர் அதிகாரிகள் யார் யார் எல்லாம் தங்களுக்கு பாதுகாப்புக்கு வேண்டும் என்று சட்டசபை செயலர் ஜமாலுத்தீன் எழுதியுள்ள கடிதம் வாட்ஸ் அப வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இது தவிர புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் காவல்துறை அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் சாதாரண மார்ஷல் உடை அணிந்து இருப்பது போன்ற படம். அந்த உடை எஸ்.ஐ . அந்தஸ்த்தில் உள்ளவர் அணிவது. ஆனால் சுதாகரும் அவருடன் இருக்கும் அதிகாரிகளும் துணை ஆணையர் , உதவி ஆணையர்கள் ஆவர். இதில் சுதாகர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவரது புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 


இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை கேட்ட போது அவர் கூறியதாவது: 


சட்டசபைக்கு பாதுகாப்புக்கு காவலர்கள் யார் யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது , அழைப்பது சபாநாயகரின் உரிமை.


சபையை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது. ஆனால் அது போன்று வரும் அதிகாரிகள் தங்களுடைய சீருடையை மறைப்பது சட்டப்படி குற்றமாகும். 


இதற்கு பின்னர் திமுக உறுப்பினர்கள் குறிப்பாக ஸ்டாலின் மீது தாக்குதல் என்றால் அதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது. அதில் ஐபிஎஸ் அதிகாரிகள் இறங்க கூடாது. மேலிட உத்தரவு ஐபிஎஸ் அதிகாரி கடைபிடிக்க வேண்டும் ஆனால் , அவர் அவருக்கு உரிய உடையை அணிய வேண்டும்.


 அதை தவிர்த்து அரசாங்கம் தனது பதவிக்கு அளிக்கப்பட்ட உடையை மறுத்து வேறு தகுதி உள்ள உடையை அணிந்து பணியில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இதற்கான நடவடிக்கையை அவர் சந்தித்து தான் ஆகவேண்டும் . இதற்கு பிரிவு 416 , 417 கீழ் வழக்கு தொடரலாம்.


அவர் மட்டுமல்ல அவருடன் பணியாற்றிய பலரும் இதே போன்ற நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார். வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாகும் இந்த புகைப்படங்கள் மற்ற விபரங்களை கவர்னருக்கு புகாராக அளித்துள்ளதாக திமுக தரப்பில் கூறுகின்றனர்.
இது தவிர நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று கூறப்படுகிறது.