சொத்து வரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்
சி.வி. சண்முகம் உண்ணாவிரத போராட்டம்
தமிழகம் முழுவதும் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றிருந்த காரணமாக விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. இதனையடுத்து இன்று மிகப் பெரிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்று வந்தது.
பெண்களுக்கு எதிரான தொடர் குற்றங்கள், சொத்து வரி உயர்வு, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அதிமுக அரசின் திட்டங்கள் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டிருந்தனர்.

சி.வி.சண்முகத்தை கைது செய்ய போலீசார்
இந்த நிலையில் திடீரென உண்ணாவிரத பந்தலை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் இதற்கு சிவி சண்முகம் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது
காவல்துறை மற்றும் அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தொண்டர்களுக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தொண்டர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டவர், அனைவரும் வாகனங்களுக்கு வழி விட்டு வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுகொண்டார். இருந்த போதும் அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சூழ்ந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
