ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் குதித்ததைப் போன்று மாணவி அனிதாவுக்காக மீண்டும் மெரினாவில் மாணவர்கள் கூடிவிடுவார்களோ என பயந்து போன எடப்பாடி அரசு அங்கு ஆயிரக்கணக்கான போலீசாரைக் குவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் மூழ்க செய்துள்ளது. 

மாணவி அனிதாவின் மரணம் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற மனவேதனையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வினால் மருத்துவ கல்வியில் இடம்பெற முடியாத மாணவர்கள், அனிதா போன்று விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவலும் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  ஆயிரக்கணக்கான போலீசார் மெரீனா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.