police filed case on dmdk deputy secretary sutheesh
தேமுதிக துணைப் பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் மீது திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.
அதேபோல் நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு மருத்துவமனை நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதி மறுத்தது. அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து பிரேமலதா உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் தலைமையில் அக்கட்சியினர் நிலவேம்பு கசாயம் வழங்கினர். அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகித்ததாக சுதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீது திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
