குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பாமக கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் எப்போதும் முகநூலில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், சக்திவேல் பாமக தொண்டர்களை பொய் வழக்குகள் மூலமாக இனி தொடர வேண்டும் என்று நினைத்தால், தான் கட்சியின் தொண்டர்களுக்கும், தன் சமுதாய மக்களுக்காகவும் தனது உயிரை விடவும் தயங்கமாட்டேன் என்றும், சின்ன சேலம் காவல் ஆய்வாளா் சுதாகா் அவர்களுக்கு எச்சரிகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முகநூலில் கருத்து பதிவிட்டார். இவரது பேச்சு வலைதளங்களில் வைரலானது. 


இதனால், ஆத்திரமடைந்த  சின்ன சேலம்  காவல் ஆய்வாளா் சுதாகா் இரவு  12 மணிக்கு குடிபோதையில் சக்திவேல் வீட்டுக்குள் புகுந்து அவரது சட்டையை பிடித்து வெளியே இழுத்து கொண்டு வந்து நடுரோட்டில் சரமாரி தாக்கினார். போலீஸ் தாக்கும் போது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக  டிரான்ஸ்பார்மரை ஆப் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், காவல் ஆய்வாளர் சுதாகர் குடி போதையில் கொடூரமாக தாக்கியதை சக்திவேல் நண்பர்கள் வீடியோ எடுத்து அதையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  இந்த வீடியோ பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வைக்கும்  சென்றதும் உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்து, சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.


இந்நிலையில், 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகர், தற்போது கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் "வெகுமதி சின்னசேலம் பாமக ஒன்றிய செயலர் சக்திவேலை குடிபோதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமர வைக்கப்பட்டார்.


ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணை இன்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.

4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?" என பதிவிட்டுள்ளார்.