poes garden raid ....ttv dinakaran press meet

மத்திய அரசின் சதி காரணமாக தொடர்ந்து நடைபெற்ற வரும் வருமான வரி சோதனைகளால் எங்களை முடக்கிவிட முடியாது என்றும் எத்தனை முறை ரெய்டு வந்தாலும் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், எதையும் தாங்கும் வலிமையை ஜெயலலிதாவும் இறைவனும் எங்களுக்கு கொடுத்துள்ளார் என்று சவால் விடுத்துள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 30 க்கு மேற்பட்ட அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது.

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியல் சதி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரில் நடந்த சோதனை இது என தெரிவித்தார்.

எப்படியாவது எங்களை அரசியலில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டு நடைபெறுவதாக தெரிவித்த தினகரன், எந்த அச்சுறுத்தலுக்கும், நடவடிக்கைக்கும் பயப்பட மாட்டேன் என கூறினார்.

ஜெயலலிதா வாழ்ந்த இந்த இல்லம் ஒரு புனித தலம் போன்றது… அங்கே சோதனை நடத்துவது வேதனையை தருகிறது… அதிகாரிகள் குறைந்த பட்சம் அம்மாவின் வீட்டையாவது ரெய்டில் இருந்து தவிர்த்திருக்கலாம் என கூறினார்.

இந்த ரெய்டு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள் என ஒருவர் கூட கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நோக்கி வணங்குகிறோம் என கூறும் அமைச்சர்கள் கூட ரெய்டு நடந்த போது அங்கு வரவில்லை என்றும் தினகரன் குறிப்பிட்டார்.

இருப்பது ஓர் உயிர்…போவது ஒரு முறை … அதனால் இந்த ரெய்டு குறித்து அஞ்சப்போவதில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

இது போன்ற அடக்கு முறைகளை தாங்கும் மன வலிமையை ஜெயலலிதாவும், இறைவனும் தங்களுக்கு கொடுத்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.